Wednesday, November 2, 2011

காலாவதியான தாய்

ஊருக்கு வெளியில் எந்தவித நவீன ஆர்பாட்டங்களும் இல்லாத மௌனம். பச்சை பசேலென தோட்டங்கள்.இவைகளை பார்த்தாலே மனம் ஊமையாகிவிடும்.அதுவும் முதியோர் இல்லத்தில் இருப்பவர்களுக்கு கேட்கவா வேண்டும்.

தொலைபேசி ஒலி அழைத்து கொண்டிருந்தது. ரிசீவரை எடுத்த முதியோர் இல்ல மேலாளர்,சிறிது நேரம் கழித்து பேசுங்கள் என்றாள்.
லலிதா ன்னா யாரு? அவங்களுக்கு போன் வந்திருக்கு என்றவுடன் அருகில் இருந்தவள், நேத்து அட்மிசன் போட்டாங்களே அந்த பாட்டி தான் அவுங்களை நான் போயி கூட்டிட்டு வரேன்னு கிளம்பினாள்.

போன் பேசிட்டு வந்த லலிதா பாட்டி, தன் நண்பர்களுடம் மீண்டும் ஐக்கியமானாள். போன்ல யாரு? என்றாள் அருகில் இருந்த பத்மா பாட்டி.

என் மகன் தான் பேசினான். நம்ம கவர்மெண்ட்ல ஏழைகளுக்கான  காப்பீட்டு திட்டம்ன்னு ஒன்னு அறுவிச்சு இருக்காங்களாம்.அதுல என்னைய பதிய சொன்னான். அதுக்கு உதவியா அவன் ஆபிஸ்ல வேலை பார்க்கிற பையன அனுப்புரானாம். அவன் கொண்டு வர்ற பேப்பர்ல  கையெழுத்து போட்டாபோதும் . மித்த வேலைய அவன் பார்த்துக்குவனாம். இந்த பாலிசி எடுத்தா எந்த நோயா இருந்தாலும் இலவசமாம்.

அப்படியா? என்ற ஆச்சர்யத்துடன் அடுத்த விசாரிப்புக்கு சென்றாள் பத்மா பாட்டி.உன் மகன் என்ன பண்றான்? நீ ஏன் இங்க வந்தே? வீட்டுல எதுவும் சண்டையா? என அடுக்கி கொண்டே போனாள்.

பதில் சொல்ல ஆரம்பித்தாள் லலிதா பாட்டி.

என் மகன் பேரு ரவி.இப்ப பாம்பேயில  உள்ள ஒரு கம்பெனியில பெரிய ஆபிசரா இருக்கான். படிச்சு பெரியாளா வரணும்னு சொல்லி சொல்லி வளர்த்தேன். அதுக்காகதான் மெட்ராஸ்ல பெரிய ஸ்கூல்ல சேர்த்து  விட்டோம். ஹாஸ்டல்ல சேர்த்து விடும் போது அப்பா அம்மாவ விட்டு பிரிஞ்சு இருக்கணும்னு அழுதுட்டே இருப்பான். லீவு விட்டா போதும் உடனே வீட்டுக்கு வந்து விடுவான். எனக்கு கூட அவன எங்க ஊர்லயே படிக்கட்டும்னு நினைப்பு தான். ஆனால் என் வீட்டுகாரர் தான் கண்டிப்புடன் அங்கேயே தங்கி படிக்கட்டும்னு கறார சொல்லிட்டாரு.

அவனும் எங்க ஆசை படி படிப்புல கெட்டிகாரனா இருந்தான். நல்ல மார்க் எடுத்து அவன் ஆசை படியே பாம்பேயில பெரிய காலேஜ்ல சேர்ந்து படிச்சு வேலைக்கும் போக ஆரம்பித்தான். அவன் ஆசை பட்ட புள்ளயவே என் வீட்டுகாரர் கல்யாணம்  செய்து வைத்தார். அவனும் வேலையின் காரணமா பாம்பேயில செட்லாயிட்டான். எங்களையும் அவன் கூட வருமாறு கேட்டான். ஆனால் என் வீட்டுக்காரர்தான் பிறந்த ஊரை விட்டு வரமாட்டேன்னு இங்கேயே இருந்துட்டோம். சொந்தகாரவுங்கள்ள யாருக்காவது கல்யாணம்னா ஊருக்கு வந்து எங்களையும் பார்த்துட்டு போவான்... அவ்வளவுதான்.

கொஞ்ச நாள்ள என் வீட்டுக்காரரும் வாழ்ந்தது போதும்னு போயி சேர்ந்துட்டாரு. அவரு போனதுக்கப்புறம் நான் என் மகன்கூட பாம்பே போயிட்டேன். ரெண்டு மாசம் தான் இருந்தேன். அந்த ஊரும் அவிங்க பேசுற மொழியும் பிடிக்கலை. புரியவும் இல்லே.. எவ்வளோ நாள்தான் யாருக்கிட்டேயும் பேசாம ஊமையா இருக்குறது. அதனால தான் கிளம்பி ஊருக்கே வந்துட்டேன். தனியா இருந்து கஷ்டப்படுவேன்னு இந்த முதியோர் இல்லத்துல வந்து சேர்த்து விட்டான். நானும் சந்தோசமா வந்துட்டேன் என்றாள் ஒரு வித விரக்தியுடன்.


உன் மகனாவது இவ்வளோ பண்றானே ?  என் மகனும்தான் இருக்கானே என்று அவளுடைய கதைய சொல்ல ஆரம்பித்த்தாள் பத்மா பாட்டி.